பன்றிக்காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
பன்றிக் காய்ச்சல் எனப்படும் Swine Flu எனும் நோய் உலகெங்கும் வெகு வேகமாக பரவி வருகின்றது. H1N1 என்ற வைரஸால் உண்டாகும் இந்த நோய், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் தான் முதலில் உண்டானது. அதன் பிறகு, மெக்ஸிகோ, கனடா நாடுகளுக்கு பரவி, தற்போது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கடந்த 10.ஆக.2009 வரை, சவூதி அரேபியாவில் 9 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். இவர்களுள் இருவர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்; ஏழு பேர் சவூதிகள். பன்றியின் சுவாச பையில் இருக்கும் H1N1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.
சாதாரண ஃபுளூ காய்ச்சலுக்கு ஒருவரிடமிருந்து எவ்வாறு பிறருக்குப் பரவுகின்றதோ, அதே போலவே இந்த பன்றிக்காய்ச்சலும் பரவுகின்றது. மேலும், சாதாரண ஃபுளூ காய்ச்சலுக்கான அறிகுறிகளே இதற்கும் அறிகுறிகள். இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.
பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்:
கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
* பன்றிக் காய்ச்சலுக்கு, காய்ச்சல் தான் முதல் அறிகுறி. அத்துடன் மூக்கிலிருந்து நீர் வடியும்.
* இருமல் தொடரும். தொண்டை வலிக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம்.
* பசி எடுக்காது. சாப்பிட்டாலும் வாந்தி வரும். * வயிற்றுப் போக்கு இருக்கும். களைப்பு ஏற்படும்.
* அதிக உடல் வெப்பம், தசை வலி, வேலை செய்ய முடியாத நிலை.
* அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும். * தண்ணீர் குடிக்க முடியாத நிலை.
* குழந்தைகளுக்கு நீலம் மற்றும் சாம்பல் நிறமாக தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.
* மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்; உயிரிழப்பும் ஏற்படலாம்
எப்படிப் பரவுகின்றது?
* இருமல் மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காற்று வழியாக பரவும்.
* வைரஸ் உள்ள இடங்களை தொட்டு, பின்னர் வாய் மற்றும் மூக்குப் பகுதியை தொடும் போது நமக்கும் வைரஸ் பரவி விடும். (அந்த வைரஸ், மனித உடலிலிருந்து வெளியேறிய பிறகும் சுமார் 2-8 மணி நேரம் மனிதர்களை பாதிக்கும் சக்தி பெற்றதாக உள்ளது.)
* நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கு.
தடுப்பு முறைகள்
* இதுவரை இந்த வைரஸுக்கான தடுப்பு ஊசி மருந்து (Vaccine) கண்டுபிடிக்கப்பட வில்லை.
* உங்களுடைய கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கை கழுவிக் கொள்ளுங்கள்.
* மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு "சர்ஜிகல் மாஸ்க்' இல்லாமல் போக வேண்டாம்.
* பன்றிக்காய்ச்சல் இருக்குமோ என்று யாரையாவது சந்தேகப்பட்டீர்களேயானால் சற்று தள்ளி இருங்கள்.
* நன்றாக தூங்க வேண்டும். காற்று வரும் இடத்தில் இருக்க வேண்டும்.
* நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை
* அறிமுகம் இல்லாத நபரிடம் கை குலுக்குதல், தொட்டுப் பேசுதல். * பொது இடங்களில் துப்புதல்.
* மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளுதல்
* சுயமாக வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல்.
* பன்றிக்காய்ச்சல் மருந்தான, டாமி ப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது. இது அறிகுறியை மறைத்து, பின்னர் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடும்.
உங்களுக்கு உடல் நலக் குறைவா?
* உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
* பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். * நிறைய தண்ணீர் குடியுங்கள்.
* தும்மல், இருமல் ஏற்படும் போது, முகத்தை டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளுங்கள்
* அடிக்கடி புதிய முகக்கவசம் போட்டுக் கொள்ளுங்கள். பழைய கவசத்தை பாலிதீன் கவரில் இட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள்.
பன்றிக்காய்ச்சல் இருந்தால்
* பயணத்தை தவிர்க்கவும். * வீடுகளிலும் தனியாக இருங்கள்.
* பணிபுரியும் இடம் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டாம்.
குழந்தைகள் கவனம்
* குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
* முகம் மற்றும் வாய்ப் பகுதியை தொடக்கூடாது. * சுடுநீர் குடிக்கவும்
* மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.
* குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.
* காய்ச்சல் மாணவர்களை அடையாளம் கண்டு, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
நன்றி: சகோ. பைசல் – ரியாத்
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக