குடிநீர் ...........கவனம் தேவை...... .டாக்டரின் அறிவுரை
--------------------------------------------------------------------------------
''எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் அடிக்கடி சளி பிடிக்கிறது. டாக்டரிடம் போனால் குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொல்கிறார். இத்தனைக்கும் கேன்களில் வரும் மினரல் வாட்டரைத்தான் நாங்கள் குடிக்கப் பயன்படுத்துகிறோம். அதையும் கூட கொதிக்க வைத்துத்தான் குடிக்க -வேண்டுமா? ஏற்கெனவே, 'குழந்தைகளுக்கு இப்படி பார்த்துப் பார்த்து மினரல் வாட்டர் மட்டும் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தியே இருக்காது. எல்லா தண்ணீரையும் குடிக்க வைத்துப் பழக்க வேண்டும்' என்கிறார்கள் என் தோழி-கள். இது உண்மையா? தெளிவுபடுத்துங்களேன்..''
டாக்டர் அசோகன், பொதுநல மருத்துவர், சென்னை:
''குடிநீர் என்பது பார்க்க சுத்தமாக இருக்க வேண்டும். நோய்க் கிருமிகளான வைரஸ், பாக்டீரியா போன்றவை அதில் இருக்கக் கூடாது. தேவையற்ற வேதிப் பொருட்கள் இருக்கக் கூடாது. நமக்கு தேவையான தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பேட், குளோரைடு போன்றவை குறைவாகவோ, அதிக-மாகவோ இல்லாமல் தேவையான அளவில் இருக்க வேண்டும். இவைதான் குடிநீருக்கான தகுதிகள்.
பொதுவாக இப்போது பரவலாகப் பயன்படுத்தப் படும் எந்த 'கேன் வாட்டரு'மே மேற்சொன்ன நான்கு தகுதிகளும் அமைந்த 'மினரல் வாட்டர்' இல்லை. அது பாதுகாக்கப்பட்ட குடிநீர்.. அவ்வளவுதான். இவை எல்லாமே சுத்தமானதாக, நோய்க் கிருமி இல்லாததாக இருக்கலாம். ஆனால் நமக்குத் தேவையான எந்தத் தாது உப்புகளுமே இதில் இருப்பதில்லை. மேலும் எல்லா பொருட்களிலும் போலிகள் பெருகிவிட்ட இந்நிலையில், நாம் வாங்குகிற எல்லா குடிநீரும் தரமானது என்றும் சொல்ல முடியாது. எனவே, கேன் வாட்டர் உட்பட குடிக்கும் தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதைக் கொதிக்க வைத்து பயன்படுத்துவதுதான் சிறந்தது.
சிலர் கொதிக்க வைத்த நீரை ஆறவைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். அதில் பலன் இல்லை. கிருமிகளை கொல்லுகிற அளவிலான வெப்பம் இல்லாதபோது மீண்டும் அதில் தூசு, கிருமிகள் சேர்ந்து விடலாம். எனவே, கொதிக்க வைத்த அன்றே அந்த நீரை பயன்படுத்தி விட வேண்டும்.
கிடைக்கும் தண்ணீரையெல்லாம் குழந்தைக்குக் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்பதெல்லாம் சரியல்ல. அப்படி கொடுக்கும்போது, லேசான கிருமித் தொற்று ஏற்பட்டால் உடலின் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்துப் போராடும்தான். ஆனால், மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதனால் வருந்தப் போவது நாம்தான். நம்மிடையே பெரும்பாலான நோய்கள் பரவுவது குடிநீரால்தான் என்பதால், குடிக்கும் தண்ணீர் விஷயத்தில் கட்டாயமாக மிகுந்த கவனம் தேவை!''
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக